Saturday, May 5, 2012

MAY'12


                                     படித்தவன், சூதும் வாதும் செய்தால்,
                                     அய்யோன்னு கவிழ்த்துவிடுவான்...
தோழர்களே,


கடந்த இதழில் வெளிவந்த தமிழக முதல்வரின் விஷன்-2023 பற்றிய விமர்சனக் கட்டுரையில், தமிழக பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பது பற்றி எழுதியிருந்தேன். எழுதிய நேரமோ என்னவோ, அடுத்த வாரமே மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்திற்கு, புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியை அளித்தது. கிட்டத்தட்ட ஓராண்டாக காலியாக இருந்த பதவிக்கு, சென்னை எதிராஜ் கல்லூரியில் இணைப் பேராசிரியராக பணியாற்றி வந்த கல்யாணி மதிவாணன் என்பவரை நியமித்து, வெற்றிடத்தை நிரப்பியுள்ளார் தமிழக கவர்னர்.
கல்யாணி மதிவாணன்

புதிய துணைவேந்தர், திறமையாக நிர்வகித்து, பல்கலைக்கழகத்தை சிறப்பான நிலைக்கு எடுத்துச் செல்லக் கூடும். லஞ்சம், ஊழலை ஓரளவிற் காவது ஒழித்து, நல்ல பெயரெடுக்கக் கூடும். மறுப்பதற்கில்லை. ஆயினும், அவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, மொக்கையான, அப்பட்டமான அரசியல் தலையீடு தவிர வேறெதுவும் இல்லை என்பது உச்சி வெயில் சூரியன் போன்று கண்களைக் கூச வைக்கிறது.
 
கடந்த திமுக ஆட்சியில் துணைவேந்தர் பதவிகள் என்பது, அதிக விலை கொடுத்துவாங்கக் கூடிய ஒன்றாக இருந்தது என்பது எல்லோருமே அறிந்த ஒன்று. வாரியங்களுக்கான சேர்மன் பதவிகளில், அரசியலும், பணமும் எப்படி விளையாடினவோ, அவை போன்றே, துணைவேந்தர் பதவிகள் எல்லாம் கிட்டத்தட்ட ஏலம் விடப் பட்டன. அதிக ஏலம் கொடுத்து வாங் கியவர்கள், பதவியைப் பயன்படுத்தி நல்ல அறுவடை செய்தார்கள். பல்கலைக்கழக ஆசிரியர், அலுவலர் பதவிகள் எல்லாவற்றுக்கும், துணைவேந்தர்களால்,10 லட்சம் முதல் 25 லட்சம் வரை லஞ்சம் வாங்கப்பட்டதாக வெளிப்படை யாகவே பேசப்பட்டது.

இப்பொழுது, மதுரை காமராஜ் பல்கலைக் கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்று பல பல்கலைக்கழகங்களில் ஊழல்புகார்கள் எழுந்துள்ளன. காவல்துறையின் ஊழல்தடுப்புப் பிரிவினர், சில பல்கலைக்கழகங்களில், ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இவ்விசாரணைகள் எல்லாம், பின்னர் சமரசமாகி விடுமோ எனும் அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே, கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின், முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் என்பவர் மீது தொடரப்பட்ட வழக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. நீர்த்துப் போகச் செய்யப்பட்டதோ எனும் சந்தேகம் எழுகிறது.

முன்பே பல முறை எடுத்துரைத்தது போல, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, மனிதவள மேம்பாடும், மனித மேம்பாடும் மட்டுமே உண்மையான அளவுகோளாக இருக்கமுடியும். இவற்றை அளிப்பதில், பல்கலைக் கழகங்கள்தான் முதன்மையாக இருக்க முடியும். உலகின் வளர்ந்த நாடுகள் எல்லாம், தங்கள் பல்கலைக்கழகங்களை மிக உயர்ந்த இடத்தில் வைத்து, போற்றிப் பாதுகாக்கின்றன.

அமெரிக்காவிலும், ஐரோப்பா கண்டத்திலும், நாட்டின் அதிபரை விட, பல்கலைக்கழக பேராசிரியருக்குத் தான் அதிக மதிப்பு, மரியாதை எல்லாம். மிகச்சிறிய நாடான சிங்கப்பூர், உலகளவிற்கு வளர்ந்ததற்கு அந்நாட்டின் சிறந்த பள்ளிக்கல்வியும், அதற்கு ஏற்ற பல்கலைக் கழகங்களுமே காரணம். இங்கு எல்லாம், திறமைக்கு, ஆய்வுக்கு, அறிவுக்கு, துணிவுக்கு, பகுத்தறிவுக்கு, நூதனத்திற்கு, நேர்மைக்கு மட்டுமே இடம் உண்டு. அது மட்டுமல்லாது, அரசியல் தலையீடு அறவே இல்லாத, தன்னிச்சையாக செயல்படும், அதே சமயம், மிகத் தெளிவான சட்டதிட்டங்களும், வரையரைகளும் கொண்ட அமைப்புகளாக அவை உள்ளன. அதனால், அங்கு வரும் பேராசிரியர்களும், அவர்கள் உருவாக்கும் மாணவர்களும் மிகச்சிறந்து விளங்குகிறார்கள் என்பதில் வியப்பில்லை.


இந்தியாவின் பல்கலைக்கழகங்கள், உலக அளவில் அல்ல, ஆசிய அளவில் கூட, மற்ற நாடுகளுக்கு அருகில் வர முடியாத நிலை உள்ளது. தமிழகத்தின் பல்கலைக்கழகங்களோ, இந்திய அளவில் நாளுக்கு நாள் பின்தங்கி வருகின்றன.

சென்னைப் பல்கலைக்கழகம் கூட, ஒரு பெரிய பாலிடெக்னிக் போலத்தான் செயல்படுகிறது. தமிழகத்தின் எல்லாப் பல்கலைக் கழகங்களும், கழுதை தேய்ந்து கரப்பான் பூச்சியான கதையாகி வருகின்றன. அதிக சம்பளம், அதிக ஊழல், அதிக மாணவர்கள், அவர்களுக்காக அச்சடிக்கப்படும் அதிக சான்றிதழ்கள் என்று எதோ காலத்தை ஓட்டி வருகின்றன.

பல்கலைக்கழக மானியக்குழு (UGC), துணை வேந்தர் பதவிகளுக்கான அளவீடுகளை அளித்துள்ளது. ஆனால், தமிழக அரசு, பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரைகளை இன்று வரை சட்டை செய்யவில்லை என்பது தான் நிதர்சனம். தமிழக பல்கலைக்கழகங்களில் ஊழல் மலிந்த தற்கு, இன்றைய துணைவேந்தர்களே காரணம் என்று கூறியுள்ளார் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், இன்றைய தமிழ் மாநிலத் திட்டக்குழுவின் உறுப்பினருமான முனைவர் பாலகுருசாமி. 

அதுமட்டுமல்லாது, இப்பொழுது, தேடும் குழுவிடம் (Search Committee), துணைவேந்தர் பதவிகளுக்கான எந்த ஒரு அளவீடும் இல்லை என்று கூறியுள்ள பாலகுருசாமி, ஏப்ரல் முதல் வாரத்தில், தமிழக கவர்னருக்கு அவர் அளித்துள்ள அறிக்கையில், இனி துணைவேந்தர் பதவிக்கு வரும் விண்ணப்பங்களைத் தெரிவு செய்வதற்கு, அதற்கான தேடும் குழுவிற்கு, சில வழிமுறைகளைப் பட்டியலிட்டுள்ளார்.

“துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கும் முனைவர், குறைந்தது 15 ஆண்டுகளாவது, பேராசிரியராகவும், ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருக்க வேண்டும், மதிப்பு மிக்க கல்லூரியின் முதல்வராகவோ, டீனாகவோ பணி புரிந்து அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேசிய அளவிலும், உலக அளவிலும் செமினார்களிலும், கூட்டங்களிலும் கலந்துகொண்டு, ஆய்வுக் கட்டுரைகளையும் புத்தகங்களையும் வெளியிட்டிருக்க வேண்டும், உயர் கல்வியில் சிறந்த தலைமைத்துவத்தை செய்து காட்டியிருக்க வேண்டும்.

அது மட்டுமல்லாது, முனைவர் பட்டத்திற்கான மாணவர்களை வழி நடத்தியிருக்க வேண்டும், கல்விக்குழுக்கள், பெண்கள் மேம்பாடு, பாடத்திட்டம் வடிவமைப்பு, மாணவர் திறனாய்வு, ஆலோசனை ஆகியவற்றில் பங்கு கொண்டிருக்க வேண்டும்.

தொழில் நுட்பம், நிர்வாகம், தலைமைப் பண்பு ஆகியவற்றில் சிறப்பானவராக மட்டுமல்லாது, தொழில் நுட்பத்தை வரவேற்பவராகவும், நிதியை சரியாகப் பயன்படுத்துபவராகவும் இருக்க வேண்டும். மிக முக்கியமாக, மற்றோருக்கு முன் மாதிரியாகவும், செயல்களில் ஒழுக்க சீலராகவும் இருக்க வேண்டும்.

மாநில அளவிலும், தேசிய அளவிலும் முரண்பாடுகள் கொண்ட எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு செலுத்துபவராகவும் இருக்க வேண்டும், தேடும் குழு, மேற்கூறிய வரையறைக்குள் வருபவர்களைத் தெரிவு செய்து, அவர்களிடம் பயோ டேட்டா வாங்குவதோடு, அவர்கள் துணை வேந்தர்களானால், பல்கலைக்கழகத்தை மேம்படுத்த எவ்வகை செயல்திட்டம் வைத்திருக்கிறார்கள் எனும் அறிக்கையையும் பெற வேண்டும். இவற்றின் அடிப்படையில், மூன்று பெயர்களை கவர்னரிடம் பரிந்துரை செய்ய வேண்டும். இந்த வரையறைகளை ஒரு அரசாணையாக கெசட் மூலம் அரசு வெளியிட வேண்டும்”.

இவ்வாறு பால குருசாமி சமர்ப்பித்த அறிக்கைக்கு அடுத்த வாரமே, மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, திருமதி கல்யாணி மதிவாணன் தேர்வு செய்யப்பட்டார். மேலே கூறிய வழிமுறைகளை வைத்துப் பார்த்தால், அவருக்கு அடிப்படைத் தகுதி கூட இல்லை என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது. முன்னாள் நிதியமைச்சரின், அதிமுக பிரமுகரின் மருமகள், முன்னாள் துணைவேந்தரின் மகள் ஆகிய தகுதிகள்தான் இன்றைக்கு அவருக்கு உண்டு. இப்படிப் பதவிக்கு வரும் துணைவேந்தர்கள் மீது மற்ற அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எந்தவித மரியாதை இருந்து விடப்போகிறது?

இப்பொழுது, தமிழகத்தின் மற்ற பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களைத் தெரிவு செய்வதற்காக தேடும் குழுக்கள் அறிவிக்கப் பட்டிருக்கின்றன. இனி வரும் துணைவேந்தர்கள் எப்படியோ?

தமிழக பல்கலைக் கழகங்களுக்கும், உடனடி சமூகத்திற்கும் சிறிதும் தொடர்பில்லாமல் போய் விட்டது கண்கூடாகத் தெரிகிற ஒன்று. தங்களை நம்பி வரும் அடுத்த தலைமுறைக்கு, கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் துரோகம் செய்கின்றன நமது பல்கலைக்கழகங்கள் என்று கூறினால், அக்கூற்றை மிகைப்படுத்தியதாக கருதமுடியாது.

அது மட்டுமல்லாது, ஏமாற்றும் துணை வேந்தர்களிடமும், ஏமாற்றும் ஆசிரியர்களிடமும் இருந்து, ஏமாற்றுவதைக் கற்றுக்கொள்ளும் இளைய சமுதாயம், சமூகத்தை வேகமான சீரழிவுக்குத்தான் இட்டுச் செல்லும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அது, இந்த சமூகத்தை ஒரு வன்முறை சமூகமாக, ஒழுக்கமற்ற சமூகமாக, உழைப்பின் மீது நம்பிக்கையற்ற சமூகமாக, அறிவற்ற சமூகமாக மாற்றவில்லையென்றாலும், எவ்வெப்போதும், சிந்தனைத் தெளிவற்ற, ஒரு சுமாரான சராசரி சமூகமாக மட்டுமே வைத்திருக்கும். அப்படிப்பட்ட நிலைக்குத்தான் இன்றைய தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்யத்தான் வேண்டியுள்ளது.

பள்ளிகளே பிட் கொடுத்து மாணவர்களைப் பொதுத்தேர்வு எழுதச் செய்வது, துணைவேந்தர் பதவிகள் ஏலம் போவது, ஆசிரியர் பணி முதல் அரசுப்பணியாளர் பணி வரை, பணம் கொடுத்து வாங்க முயல்வது என்று தமிழகம் நாறுகிறது.

படித்தவன் சூதும் வாதும் செய்தால், போவான், போவான், அய்யோன்னு போவான் என்றார் கவி பாரதி. நம் படித்தவர்கள் மட்டும் அய்யோன்னு போக மாட்டார்கள். அவர்களது மோசமான செயல்பாடுகளால், ஒட்டுமொத்த சமூகத்தையும் அய்யோன்னு கவிழ்த்து விடுவார்கள்.

அதனால், அவசரமாக நல்ல மாற்றம் தேவைப்படுகிறது. ஒட்டு மொத்த படித்த சமூகத்தின் அணுகுமுறையிலும்.


அதற்கு விரைந்து செயல்படுவோம்.
நட்புடன்

 



அ.நாராயணன்

                                     *******************    *************     *******************

                                       எளிமை, இனிமை, நன்மை! -  புத்துணர்ச்சி தொடர்-2

இம்மாத யோசனை

வீட்டில் உற்பத்தியாகும் மக்கும் குப்பைகளை உரமாக்கி வீட்டிலேயே பயிர்களை வளர்க்க இதோ ஒரு எளிய வழி. இனிய வழி. கிராமங்களில் இருப்போரானாலும், நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்பவரானாலும், ஒரு சிறிய பால்கனி இருந்தால் கூடப் போதும்... நம் வீட்டில் உற்பத்தியாகும் காய்கனிக் குப்பைகளை நாமே உரமாக்கிக் கொள்ளலாம். அதனைக் கொண்டு காய்கறிகளைப் பயிரிடலாம்.
முதலில், சுட்ட மண்ணால் ஆன ஏழு பூந்தொட்டிகளை வாங்கிக் கொள் ளுங்கள். அவற்றிற்கு முறையே, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என்று சனி வரை எழுதி பெயிரிடுங்கள். ஒவ்வொரு தொட்டியிலும் அடியில் சிறிது மணல், தேங்காய் நார் இட்டு விடுங்கள். எல்லாவற்றையும் வரிசை யாக பால்கனியில் ஓராமாக வைத்து விடுங்கள். பின்னர், ஞாயிறு அன்று வீட்டில் உற்பத்தியாகும் காய்கனிக் குப்பை, பழத்தோல்கள் ஆகியவற்றை ஞாயிறு என்று எழுதியுள்ள தொட்டியில் போட்டு விடுங்கள்.


திங்கள் உற்பத்தியாகும் காய்கனிக்கழிவுகள், திங்கள் பெயரிடப்பட்ட தொட்டியில், இவ்வாறே வாரம் முழுவதும் காய்கனிக் கழிவுகளைப் போட்டுவிட்டு, ஒரு பிடி மண்ணைத் தூவிவிடவும். முடிந்தால் அவ்வப்போது, ஒரு தேக்கரண்டி புளித்த மோர் விடவும். காய்கனிக்கழிவுகள் பெரிய தூண்டுகளாக இருந்தால், அவற்றை நறுக்கி சிறிதாக்கி இடவும்.


சமைத்த உணவு, மாமிசக் கழிவு ஆகியவற்றை இவற்றில் போட்டு விட வேண்டாம். இவ்வாறு செய்யும் போது, கொசு, ஈ போன்றவற்றின் தொல்லை இருக்காது. துர்நாற்றம் வீசாது. உங்கள் வீட்டில், நீங்கள் காய்கனிகளைப் பயன்படுத்துவதைப் பொறுத்து, இவ்வாறு காய்கனிக் கழிவும், மண்ணும் கலந்து நிரம்ப 4 முதல் 6 மாதங்கள் பிடிக்கலாம். முடிந்தால் அவ்வப்போது கம்பி அல்லது குச்சியைக் கொண்டு கிளறிவிடலாம். 

 தொட்டிகள் நிரம்பிய பின்னர், ஒரு தொட்டியில் கத்தரிவிதை, மற்றொரு தொட்டியில் வெண்டை, மூன்றாவதில் தக்காளி என்று உங்களுக்கு விருப்பமான காய்கனிகள், பூக்களை வளர்த்துக் கொள்ளலாம். தொடர்ந்து நல்ல மகசூல் கொடுப்பதுடன் இயற்கையாக நீங்களே விளைவித்த காய்கனிகளை உண்டு மகிழலாம்.
அடுத்ததாக இன்னும் 7 தொட்டிகளை வாங்கி உங்கள் இனிமையான ஆரோக்கியமான பொழுதுபோக்கைத் தொடரலாம்.

என்ன, ஐடியா பிடித்திருக்கிறதா? சுலபமானதுதானே? உடனே ஏழு பூந்தொட்டிகளை வாங்கி வந்து விடுங்கள்.