Friday, March 8, 2013

மார்ச் 2013


இரத்தக் கண்ணீர் சிந்தும் புத்தர்
அன்புத் தோழர்களே

“.....உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், இலங்கையில் நடந்த போரில், அந்நாட்டு அரசுக்கு நீங்கள் எல்லா விதமான உதவிகளையும் செய்யவில்லையா? மக்களுக்கு உண்மையாக நடந்துகொள்ளுங்கள். நம் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, உலக நாட்டு மக்களுக்கும், நம் அரசு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
2009ம் ஆண்டு இலங்கைப் போரின் கடைசி கட்டத்தில் நடந்தது, திட்டமிட்டு செய்யப்பட்ட இனப்படுகொலை. அதன்பின் நடந்து கொண்டிருப்பது தமிழ் இன அமைப்பின் மீதான கட்டமைக்கப்பட்ட அழிப்பு வேலை. இன்றைக்கு இலங்கையில் 90,000 போர் விதவைகள் கையறு நிலையில் கிடக்கிறார்கள். இலங்கையில், என்ன மனித நாகரீகம் இருக்கிறது? புத்தருக்கு அன்பும், ஆதரவும்தான் தெரியும்..... 

....இலங்கையில் இன்று புத்தர் இரத்தக்கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார். உள்நாட்டில் இடம் பெயர்ந்த தமிழ் அகதிகள், நிர்கதியாக அழிந்து கொண்டிருக்கிறார்கள். திட்டமிட்டு, வடகிழக்கு தமிழ்ப்பகுதிகள் ராணுவத்தின் பிடியில் சிங்களர் மயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது....

....ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி இருந்த போது, உலக நாடுகள், இந்தியா மீது நம்பிக்கை கொண்டிருந்தன. ஏன், இப்பொழுது இந்திய அரசு இவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறது? உலக நாடுகளின் முன்பு, இந்திய அரசுக்கு தலைகுனிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. நீதிக்காகவும், நியாயத்திற்காகவும், இந்தியா ஏன் குரல் கொடுக்க மறுக்கிறது? இப்பொழுதாவது இந்தியா கவுரவத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில், போர் குற்றமும், இனப்படுகொலையும் செய்த இலங்கை ராணுவத்திற்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே முன்மொழிய வேண்டும்....”

இவ்வாறு மிக உருக்கமாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் து.ராஜா பாராளுமன்றத்தில் பேசினார். அதிமுக, திமுக உட்பட தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் மிக சிறப்பாகப் பேசியுள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக 24 நாடுகளும் ஆதரவாக 15 நாடுகளும் வாக்களித்தன. 8 நாடுகள், வாக்களிப்பில் இருந்து பின் வாங்கின. ஆனால், அப்பொழுது நிறைவேற்றப்பட்ட, மிகக் குறைந்தபட்ச, கடுமையற்ற தீர்மானத்தின்படிகூட, இலங்கை அரசு இதுவரை எந்த சமாதான நடவடிக்கையும் எடுக்கவில்லை

இலங்கை அரசே, உலக நாடுகளை சமாதானப்படுத்தும் விதமாக ஏற்படுத்திய, “போர்ப் படிப்பினை மற்றும் சமரச ஆணையத்தின்”  உப்பு சப்பு இல்லாத பரிந்துரைகளைக் கூட இலங்கை அரசு கண்டு கொள்ளவில்லை. தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில், அப்பாவி தமிழர்களைக் கொன்று புதைத்து 3 ஆண்டுகளுக்குப்பின், எஞ்சியுள்ள தமிழ் மக்களைக்கூட திட்டமிட்டு ஒடுக்கி வரும் நிலையில், மீண்டும் அமெரிக்க நாடு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில், இலங்கை ராணுவத்திற்கு எதிராக மற்றுமொரு தீர்மானத்தை இம்மாதம் கொண்டு வருகிறது.

இம்முறை இலங்கைக்கு எதிராக, மிக அதிக நாடுகள் வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு கொண்டு வந்த தீர்மானத்தை விட, சற்றுக் கடுமையானதாக இம்முறை இருக்கலாம். உலகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகளும், ஆதரவாக பல மனித உரிமை அமைப்பு களும் களம் இறங்கியுள்ளன.

ஆனால், இதுவரை ஐக்கிய நாடுகள் சபையும், உலக நாடுகளும் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தால், மிகப்பெரிய நம்பிக்கை எதுவும் தோன்றவில்லை. இலங்கை அரசுக்கு உலக நாடுகளின் கண்டனக் குரல்களைத் தாண்டி, பெரிய ஆபத்து எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. ராஜபக்சே அரசு, தொடர்ந்து இப்படிப்பட்ட கண்டனக் குரல்களைப் பொருட்படுத்தப் போவதில்லை என்பதையே அதன் சமீபத்திய நடவடிக்கைகள் காட்டுகின்றன

சீன, ரஷ்ய நாடுகளின் நேரடி ஆதரவு மட்டுமல்லாது, இந்தியாவின் மறைமுக ஆதரவும் இலங்கைக்கு இருக்கும் எனும் தெம்பில் இருக்கிறது ராஜபக்சே அரசு.

இவ்வாண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் சீனாவும், ரஷ்யாவும் இடம் பெறவில்லை. எனினும் அவர்கள் இலங்கைக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்வார்கள் என்று நம்புகிறது இலங்கை அரசு.

அதற்கு பிரதிபலனாக, ஒட்டகம் வீட்டிற்குள் படிப்படியாக புகுந்த கதையாக, இலங்கையில் சீனாநீங்காதஇடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம். ரஷ்யாவிற்கும், இலங்கையில் அணுஉலை அமைப்பது, ஹெலிகாப்டர் விற்பது போன்ற பொருளாதார வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்திய கார்ப்பரேட்களுக்கும்தான்.

இந்நேரத்தில், விடுதலைப்புலிகள் பிரபாகரனின் கடைசி மகன், 12 வயது பாலகன் பாலச்சந்திரன் நெஞ்சில் 5 முறை சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆதாரக் காட்சிகள் உலக மக்களின் மனசாட்சியைத் தட்டி உலுக்கியுள்ளது. இச்சிறுவனைக் கொல்வதற்கு முன், அவன் கண்முன்னே, சரணடைந்த 8 விடுதலைப் புலி வீரர்கள் கொடுமைப்படுத்தி கொல்லப் பட்டிருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்பது தமிழ் இன அழிப்புக்கான களமாக மாறியது. நூற்றுக்கணக்கான பாலச்சந்திரன்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். 2008 முதல் மே 2009 வரை, இரு ஆண்டுகளாக 1,40,000கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று யூகிக்கப்படுகிறது.

பெண்கள், திட்டமிட்ட கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். கொத்து குண்டுகள், ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு உடல்கள் சின்னா பின்னமாக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள் அழிக்கப்பட்டன. கொன்று குவித்தும் கற்பழித்தும், அருகில் நின்று சிரித்துக் கொண்டு, புகைப்படமெடுத்து கொண்டாடியுள்ளனர் சிங்கள ராணுவத்தினர்.


அப்பாவிப் பெண்களின் மார்புகளையும், நாக்குகளையும் அறுத் தெரிந்துள்ளனர். புதிய புதிய வழிகளில் சித்திரவதை செய்யப் பட்டிருக்கிறார்கள். 16,000கும் மேற்பட்டவர்கள் உடல் ஊனமாகிக் கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறதுமுள்வேலி முகாம்களில் தஞ்ச மடைந்திருந்த ஏகப்பட்ட ஆண்களும், பெண்களும் ராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டு, அவர்கள் கதி என்ன என்பது இன்று வரை தெரியாது.

பிறப்புறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சியும், ஊசிகளை செலுத்தியும், பல் உடைக்கப்பட்டும், தூக்கில் தொங்கவிடப்பட்டும், கொளுத்தப்பட்டும் இன்ன பிற வகைகளிலும் வதை முகாம்களில் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர். சிங்கள ராணுவத்தின் கொடுமைகளைப் பற்றி பேசிய, எழுதிய ஊடகவியாளர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  சமீபத்தில்கூட, ஆசிய சட்டவள மையம் எனும் மனித உரிமை அமைப்பு இலங்கையின் மத்திய பிராந்தியத்தில், மொத்தமாகப் புதைக்கப்பட்ட சவக்குழிகளைக் கண்டுபிடித்துள்ளது. 

போரின் கடைசி 138 மிக மோசமான நாட்களில், தமிழீழப் பகுதிகள், தமிழர்களுக்கான சவக்கிடங்காக மாறின. இன்றைக்கு சேனல் 4 மூலம், இலங்கை ராணுவத்தின் இன அழிப்பும், போர் குற்றங்களும், தக்க ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தப்பட்டு, உலக மக்களின் முன் காட்டப்பட்டு, எல்லோரின் மனசாட்சியையும் உலுக்கி எடுத்துவிட்டது. சேனல் 4 தொலைக் காட்சிக்கும், ஆவணப்படுத்திய இயக்குனர்களுக்கும், மனசாட்சி உறுத்தியதால் ஆதாரங்களை வெளிப்படுத்த உதவிய சிங்களர் களுக்கும் எவ்வளவு நன்றிக்கடன் செத்தினாலும் போதாது.

இப்பொழுதும், இலங்கை அதிபரின் வெறி அடங்கவில்லை. இலங்கையில் சிறு சலசலப்பு ஏற்பட்டாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுகிறது. சமீபத்தில் ஜாஃபனா பல்கலைக்கழக மாணவர்கள் ராணுவத்தின் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்றைக்கு இப்பல்கலைக் கழகம் ராணுவத்தின் பிடியில் உள்ளது.

ஆயினும், போரின்போது, மவுனசாட்சியாக இருந்த ஐநா அமைப்பும், உதவிய இந்தியாவும் இப்பொழுதாவது விழித்துக்கொள்ளுமா? தக்கதொரு வலுவான தீர்மானம் நிறைவேறுமா?

ஐநா தலைமையில், ”தந்திரமான விசாரணை சாத்தியமா? குற்றம் செய்த வர்கள் தண்டனை பெறுவார்களா? எஞ்சிய தமிழர்களுக்கு உரிமையும், வாழ்வாதாரமும் கவுரவமும் கிட்டுமா? நெடுந்தூரப் பயணம் இது.

எதிர்காலத்தை கணிக்க முடியாத சூழல். அதிக நம்பிக்கை கொள்ள முடியாத சூழல். ஆயினும் உணர்வுள்ள ஒவ்வொருவரும் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டிய கடமை உள்ளது.
கனத்த மனதுடன்,
.நாராயணன்